BREAKING NEWS:
Search

வைகை எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் டிவி நிருபர், இன்னொருவர் எம்.பி.சுமனின் மச்சினிச்சி, மற்றொருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா.

மூன்று பேரில், இரண்டு பேர் இறந்துவிட, நீது சந்திரா மட்டும் பலத்த காயத்துடன் உயிர்போகும் நிலையில் குத்துயிரும் கொலையிருமாக கிடக்கிறார். இந்த கொலையை விசாரிக்க ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.கே.வை நியமிக்கிறார் எம்.பி.சுமன். அவர் அதே பெட்டியில் பயணம் செய்யும் தீவிரவாதியான ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகப்படுகிறார். ஆனால், அவர் இந்த கொலையை செய்யவில்லை என்பது தெரிந்ததும், அந்த கூபேயில் உடன் பயணிக்கும் மற்றவர்கள் மீது தனது சந்தேக பார்வையை செலுத்துகிறார் ஆர்.கே.

இந்த கொலைக்கான விசாரணையை வெவ்வேறு கோணங்களில் விசாரிக்கும் ஆர்.கே.வுக்கு அந்த கொலைகளுக்கான பின்னணியும், அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் கிடைக்கிறது. இறுதியில், அந்த குற்றவாளி யார்? அவருக்கு என்ன தண்டனை கிடைக்கிறது? என்பதை எதிர்பாராத கிளைமாக்சுடன் கொண்டு போய் முடித்திருக்கிறார்கள்.

ஆர்.கே. துணிச்சலான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கொலையின் காரணங்களுக்கான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்போதும், குற்றவாளிகளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும் வேளையிலும் நமக்குள்ளே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல், எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளிலும் இவரது ஆக்ஷன் பலே சொல்ல வைக்கிறது.

இரட்டை வேடங்களில் வரும் நீது சந்திரா, தனது வித்தியாசமான நடிப்பால் இரண்டையும் வேறுபடுத்தி காட்டியுள்ளார். அவரை சுற்றியுள்ள மர்மங்கள் விலகும் கிளைமாக்ஸ் காட்சி நமக்கே மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கிறது. ஆர்.கே.வுடன் படம் முழுக்க வலம் வரும் மற்றொரு போலீஸ் அதிகாரியான நாசர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு.

எம்.பியாக வரும் சுமன், நடிகையாக வரும் இனியா, ரயில்வே போலீசாக வரும் ஜான் விஜய், டி.டி.ஆராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், டாக்டர்களாக வரும் சுஜா வருணி, தீவிரவாதியாக வரும் ஆர்.கே.செல்வமணி, கதாசிரியராக வரும் மனோபாலா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும், அவர்கள் அனைவருக்கும் சமமான பங்களிப்பு கொடுத்துருப்பது படத்திற்கு மேலும் பலமாக அமைந்திருக்கிறது.

ஒரு ரெயிலில் நடக்கும் கொலை, அதை தொடர்ந்து நடைபெறும் விசாரணை என ஆரம்பத்தில் எடுக்கும் வேகம், கடைசிவரை குறையாமலேயே சென்றுள்ளது. இந்த கதை தமிழ் சினிமாவுக்கு புதிது. இந்த கதையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள்தான் படத்தின் முக்கிய சிறப்பம்சமே. இரண்டேகால் மணி நேரம் ஒரு விறுவிறுப்பான திரில்லிங்கான அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.

சஞ்சீவ் குமாரின் ஒளிப்பதிவும் பாராட்டப்பட வேண்டியது. ரயிலில் நடக்கும் ஒரு கதையை இவரது கேமரா படத்தின் வேகம் குறையாமல் விறுவிறுப்பாக நகர உதவியிருக்கிறது. அதேபோல், தமனின் பின்னணி இசையும் படத்திற்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது. அதேபோல், வசனங்களும் படத்திற்கு முதுகெலும்பாய் அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ வேகம்.

Please follow and like us:
0Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)