BREAKING NEWS:
Search

4 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரிய சசிகலா மறுஆய்வு மனு தள்ளுபடி

புதுடெல்லி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, நால்வரையும் குற்றங்களில் இருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியது. கர்நாடக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை விதித்து தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால், அவர் இந்த வழக்கில் இருந்து விலக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனையை அனுபவித்து வருகின்றனர். தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும், தலா ரூ.10 கோடி அபராதத்தையும் உறுதி செய்து வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, அமிதவராய் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மறுஆய்வு மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டனர். நீதிபதிகளின் அறையில் மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து, அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர். நீதிபதிகளின் உத்தரவு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரால் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணையின் போது மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி மனுதாரர்கள் சார்பில் நேரில் ஆஜராகி, மனுதாரர்கள் தரப்பில் எழுத்துபூர்வமான வாதங் களை தாக்கல் செய்தார். இந்த மறுஆய்வு மனுக்கள் கோர்ட்டின் திறந்த அமர்வில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டது, மறுஆய்வு மனுக்களை கோர்ட்டின் திறந்த அமர்வில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் மற்றும் பிற ஆவணங்கள் எங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் தவறு ஏதும் காணப்படவில்லை. எனவே இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதால், மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)